ஹைதராபாத் :
நாட்டின் அரிசி உற்பத்தி செய்யும் முன்னணி மாநிலங்களில் ஒன்றான ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் இருந்து சுமார் 4 ½ லட்சம் கிலோ ‘ரேஷன்’ அரிசி (450 மெட்ரிக் டன்) ஆப்பிரிக்கா, மலேசியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு கடத்தப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
மத்திய பிரதேஷ், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, சத்தீஸ்கர் மாநிலங்களில் செயல்படும் ஏற்றுமதி நிறுவனங்கள், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளின் உதவியுடன், கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை பட்டை தீட்டி, சென்னை, காக்கிநாடா, க்ரிஷ்ணாம்பட்டணம், பன்வெல் துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்துள்ளது.
வெளிநாடுகளுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட பிரகாசம் மாவட்ட போலீசார் கடத்தலுக்காக பதுக்கிவைக்கப் பட்டிருந்த சுமார் 100 டன் எடையுள்ள ரேஷன் அரிசியை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணையில், இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 450 டன்னுக்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி இதுவரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மதிப்பு சுமார் 150 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருப்பதாகவும், மாவட்ட எஸ்.பி. சித்தார்த் கவுசல் கூறியிருக்கிறார்.
மேலும், இதுகுறித்த விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும் நாடு முழுவதும் செயல்பட்டு வந்த இந்த கடத்தல் கும்பலுக்கு பல்வேறு நபர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.
ரேஷன் அரிசி கடத்தப்படுவதும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வெளி மார்கெட்டில் விற்கப்படுவதை மட்டுமே கேள்விப்பட்டிருந்த மக்களுக்கு, வெளிநாடுகளுக்கும் ரேஷன் அரிசி கடத்தப்படும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.