ரியாத்: சவுதி அரேபியா நாடானது கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தியதால், புனித தலமான மெக்கா மசூதிக்குள் இன்று யாத்ரீகர்கள் தொழுகை நடத்தினர்.
கொரோனா காரணமாக, கடந்த மார்ச் முதல் மெக்கா மசூதிக்குள் எந்த யாத்ரீகர்களையும், உள்ளூர் மக்களையும் தொழுகை நடத்த சவுதி அரேபியா அனுமதி்க்கவில்லை. வெளிநாட்டினருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
புனித ரமலான் பண்டிகை தினத்திலும் கூட யாரும் வழிபாடு நடத்த அனுமதிக்கவில்லை. இந்நிலையில் சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதையடுத்து, அங்கு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசானது தளர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி, மெக்கா புனித மசூதிக்குள் அதிகபட்சமாக 6 ஆயிரம் யாத்ரீகர்கள் மட்டும் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டனர்.
நாள்தோறும் மெக்கா மசூதி பலமுறை கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்படுகிறது. நீண்ட நாட்கள் கழித்து 5 வேளை தொழுகை நடத்த அனுமதி்க்கப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்க்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தொழுகை நடத்தும் முன் ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்து, தங்களுக்கு உரிய நேரத்தில் அனுமதி பெற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இன்று காலை மசூதி திறக்கப்பட்டதும் முதல் கட்டமாக 50 யாத்ரீகர்கள் குறிப்பிட்ட இடைவெளியுடன் காபா மசூதியை சுற்றிவரை அனுமதிக்கப்பட்டனர். சவுதி அரசானது, முதல்கட்டமாக நாள்தோறும் 6 ஆயிரம் பேரை அனுமதிக்க திட்டமிட்டுள்ளது. 2வது கட்டத்தில் 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர்வரை சூழலுக்கு ஏற்ப அனுமதிக்க முடிவு செய்துள்ளது.