
அமிர்தசரஸ்: பாகிஸ்தான் அரசு தனது எல்லைக்குள் கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா பாதையை மீண்டும் திறந்துள்ள நிலையில், இந்திய எல்லைக்குள் அதை திறப்பது தொடர்பாக மோடி அரசின் சார்பில் இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
பாகிஸ்தானில், நரோவல் மாவட்டத்தில், இந்திய எல்லையை ஒடடி கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா உள்ளது. சீக்கிய மத குருவான குருநானக் தேவ், தன் வாழ்வின் கடைசி 18 ஆண்டுகள் இங்குதான் தங்கியிருந்தார். அவரின் நினைவிடம் அங்குதான் அமைந்துள்ளது.
இந்த குருத்வாராவுக்கு, அனைத்து மதத்தினரும் ‘விசா’ இல்லாமல் செல்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா காரணமாக, மார்ச் 16ம் தேதி, கர்தார்பூர் பாதை தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்ததால், பாகிஸ்தான் அரசு, தனது எல்லைக்குள் கர்தார்பூர் பாதையை மீண்டும் திறந்துள்ளது. ஆனால், மத்திய மோடி அரசு இதுகுறித்து இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது.
இதுபற்றி, மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது; கொரோனா பரவல் நிலவரம், ஊரடங்கு தளர்வு உள்ளிட்ட பல அம்சங்களின் அடிப்படையில்தான், பாதையை மீண்டும் திறப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும். இதுதொடர்பாக, மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகங்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel