புதுடெல்லி: எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், தாக்கம் வாய்ந்த கொரோனா தடுப்பு மருந்து அடுத்த 2021ம் ஆண்டு ஜனவரியிலேயே இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்துள்ளார் எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர். ரந்தீப் குலேரியா.
ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது, “இந்தியாவில் கோவிட்-19 நோய்க்கான தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும் என்பதை அறுதியிட்டு சொல்வது கடினம். ஏனெனில், இது பலவிஷயங்களை உள்ளடக்கியது.
தற்போது நடைபெற்றுவரும் பல்வேறான பரிசோதனை முடிவுகளைச் சார்ந்தே எதையும் கூற முடியும். எல்லாமே திட்டமிட்டபடி சரியாக நடக்கும்பட்சத்தில், அடுத்தாண்டு(2021) ஜனவரி மாதமே இந்த தடுப்பு மருந்து இந்திய மருந்து சந்தையில் கிடைக்கும்.
அதேசமயம், ஆரம்பகட்டத்தில் சந்தைக்கு விற்பனைக்காக வரும் மருந்தின் அளவு, இந்தியாவின் மிதமிஞ்சிய மக்கள்தொகைக்குப் போதுமானதாக இருக்காது. எனவே, அந்த மருந்தின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பெரிய சவாலை சந்திக்க வேண்டியிருக்கும்” என்றுள்ளார் அவர்.