சென்னை: கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளும் தன்னார்வலர்களுக்கு காப்பீடு செய்யப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆருடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமானது கொரோனா தொற்றுக்கான கோவேக்சின் தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளது. இந்த மருந்து தற்போது 2ம் கட்ட ஆராய்ச்சியில் உள்ளது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவி ஷீல்டு தடுப்பு மருந்தின் முதல் கட்ட ஆராய்ச்சி நிறைவடைந்தது. இந் நிலையில், 2ம் கட்டமாக மனிதர்களிடம் பரிசோதிக்கும் முறை பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.
அதற்காக நாடு முழுவதும் 17 மையங்களில் 1,600 பேருக்கு தடுப்புமருந்து செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் 160 பேருக்கும், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் 140 பேருக்கும் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன் கண்காணிப்பாளராக பொது சுகாதாரம் மற்றும்நோய் தடுப்பு துறை இயக்குநர் செல்வவிநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில், சென்னை அரசு பொது மருத்துவமனையில் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனைக்கு 160 தன்னார்வலர்கள் தேவை உள்ளது என்று செல்வவிநாயகம் கூறி உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: 18 வயதுக்கு மேற்பட்ட, கொரோனா தொற்று ஏற்படாத ஆரோக்கியமான உடல்நலம் கொண்டவர்கள் பரிசோதனைக்கு முன் வரலாம். பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்பவர்களுக்கு காப்பீடு செய்யப்படும்.
தடுப்பூசி போட்டுக் கொண்டு வீட்டுக்கும், வேலைக்கு செல்லலாம். விருப்பம் உள்ளவர்கள் 7806845198 என்ற எண்ணிலோ அல்லது covidvaccinetrialdph@gmail.com என்ற இமெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி உள்ளார்.