சென்னை : காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் தலைநகர் டெல்லியில் அக்டோபர் 9ந்தேதி நடைபெற உள்ளது. இதில் சம்பா சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் திறந்துவிட தமிழகஅரசு வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். கர்நாடக அரசுசரியான முறையில் நீர் திறந்து விடுகிறதா என்பத குறித்து, இந்த நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்கு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் மாதமொருமுறை கூடி, காவிரி நீர் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, கொரோனா பாதிப்பு காரணமாக ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில், கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில் காவிரி தொழிற்நுட்பப் பிரிவு தலைவர் சுப்பிரமணியம், நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட, நான்கு அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது, நடப்பு ஆண்டுக்கான ஒதுக்கீட்டில், கர்நாடக அரசு, 14 டி.எம்.சி.,க்கு மேல் நிலுவை வைத்துள்ளது , அதை உடனே வழங்க உத்தரவிட வலியுறுத்தப்பட்டதுடன், கர்நாடக அணைகள் மழையால் நிரம்பிய போது, அதிலிருந்து உபரி நீர் அதிகளவில் திறக்கப்பட்டது என்றும் இந்த நீரை தமிழகத்தின் கணக்கில் சேர்த்து, கர்நாடக அரசு ஏமாற்றியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், நடப்பு ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் 2.44 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு நிலுவை வைத்துள்ளது. அதை திறந்துவிட உத்தரவும் வலியுறுத்தப்ட்டது.
இந்த நிலையில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் அக்டோபர் 9ம் தேதி டில்லியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்க தமிழக அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். அப்போது, இம்மாதம் 20.2 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டிய தண்ணீர் மற்றும் நிலுவையில் உள்ள 2.44 டிஎம்சி தண்ணீரை வழங்க உத்தரவிடம்படி மீண்டும் வலியுறுத்தப்பட இருப்பதாகவும், காவிரி டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி பருவம் துவங்கியுள்ளதால் முறைப்படி நீர் திறக்க கர்நாடக அரசிற்கு உத்தரவிடும்படி இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.