1972–ஆம் ஆண்டில் அ.தி.மு.க.வை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். அதன்பிறகு அவர் 3 முறை முதலமைச்சராக ஆட்சி கட்டிலில் இருந்துள்ளார். அவரது மறைவுக்கு பின் கடந்த 27 ஆண்டுகளாக கட்சியின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தார். அவரும் சுமார் 10 ஆண்டுகாலம் தமிழக முதல்வராக இருந்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த காலத்திலேயே, அ.தி.மு.க.வை அழித்துவிட வேண்டும் என்று தி.மு.க.தலைவர் கருணாநிதி பல்வேறு இன்னல்களை கொடுத்தும், அதையும் முறியடித்து அதிமுகவின் தலைவராக ஜெயலலிதா இருந்து, எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு 28 ஆண்டுகள் அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் சாதனை படைத்தவர். அ.தி.மு.க.வில் 1½ கோடி தொண்டர்களை உருவாக்கிய பெருமை அவருக்குண்டு.
ஆனால், அவரது மறைவுக்கு பிறகு, அதிமுகவை கைப்பற்ற சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தினர்கள் கைப்பற்ற முயன்றதால், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து வலுக்கட்டாயமாக முதல்வர் பதவி பிடுங்கப்பட்டதால், கோபமடைந்தவர், ஜெ.சமாதியில் மவுனவிரதம் மேற்கொண்டு, கட்சியை இரண்டாக உடைத்தார். இதற்கிடையில், சசிகலாவும் ஜெயிலுக்கு செல்ல, எடப்பாடி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் பாஜக தலையிட்டு, ஒபிஎஸ்-ஐயும், இபிஎஸ்-ஐயும் சமாதானப்படுத்தி உடைந்த கட்சி இணைக்கப்பட்டது. அப்போது நடந்த பேச்சுவார்த்தையின்படி, ஓபிஎஸ்.க்கு துணை முதல்வர் பதவியும், கட்சிப்பதவியும் வழங்கப்பட்டது. இருந்தாலும், இரு தலைவர்களுக்கு இடையே உரசல் நீடித்து வருகிறது.
கட்சியின் நிர்வாகிகள் மட்டுமே எடப்பாடி வசம் இருக்கிறார்கள். கோடிக்கணக்கான தொண்டர்கள் தன்னுடனேயே இருக்கிறார்கள்., ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவன் நான் ஒருவனே என்று இன்றுவரை ஓபிஎஸ் மார்த்தட்டிக் கொண்டு வருகிறார்.
இந்த சூழலில், தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 6 மாதத்தில் வர இருப்பதால், முதல்வர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பதில் மீண்டும் இரு கோஷ்டிகளுக்கு இடையே மீண்டும் மோதல் எழுந்துள்ளது. கடந்த வாரம் அதிமுக செயற்குழு கூட்டப்பட்டது. அதில், முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், காரசார வாக்குவாதங்களும், ஓபிஎஸ், இ.பி.எஸ் இடையே மோதலும் எழுந்ததாக கூறப்பட்டது. இதனால், முதல்வர் வேட்பாளர் குறித்து அக்டோபர் 7ந்தேதி அறிவிக்கப்படும் என கட்சி தலைமை அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, இரு தரப்பினரும், அவர்களின் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனைகள் மேற்கொண்டு வருகின்றனர். சில அமைச்சர்கள் இரு தரப்பினரையும் சந்தித்து, சமாதானம் பேசி வருகின்றனர். இருந்தாலும், இருவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருவதாகவும், முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க எடப்பாடி தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால், வரும் 7ந்தேதி அதிமுக தலைமை அறிவித்தபடி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதால், அதிமுக எம்எல்ஏக்களை 6ந்தேதி தலைமைக் கழகம் வர கட்சித் தலைமை அறிவுறுத்தி உள்ளது. அவர்களின் கருத்துக்களை கேட்க விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது இருக்கும் எம்எல்ஏக்களில் 90 சதவிகிதம் பேர் எடப்பாடிக்கு ஆதரவானவர்களே என்பதால், அவர்கள் எடப்பாடியையே முதல்வராக கைநீட்டுவார்கள். அதனால், என்ன செய்வதென்று விழிபிதுங்கியுள்ள ஓபிஎஸ், கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆட்சிக்கு எடப்பாடி தலைவராக இருக்க வேண்டுமென்றால், தனக்கு கட்சித்தலைவர் பதவி வேண்டும், கட்சியின் ஒரே தலைமை நான்தான் என போர்க்கொடி தூக்கி உள்ளார். ஆனால், கட்சியை ஒட்டுமொத்தமாக ஓபிஎஸ் வசம் ஒப்படைக்க ஈபிஎஸ் தரப்பு மறுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ்.ன் பிடிவாதம் காரணமாக அதிமுகவில் இழுபறி தொடர்ந்து வருகிறது. இதனால் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும், விரைவில் கட்சி மீண்டும் உடைவதற்கான வாய்ப்பு உருவாகி வருவதாகவும் தென்மாவட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சில நிர்வாகிகள் சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும்வரை முதல்வர் வேட்பாளார் யார் என்பது குறித்து அறிவிக்கக்கூடாது என்றும், அவரது வருகைக்கு பிறகு கட்சி, ஆட்சியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, அதுவரை பொறுத்திருப்போம் என்று கூறி வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
எது எப்படியோ, வரும் 7ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளிவராது என எதிர்பார்க்கப்படுகிறது.