சென்னை: வெளி மாவட்ட பயணிகள் வருகை அதிகரிப்பு எதிரொலியாக  தமிழகம் முழுவதும் மேலும் 200 விரைவு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டு, கடந்த 6 மாதங்களாக இயக்கப்படாமல் இருந்து வந்த, போக்குவரத்து கடந்த 7ந்தேதி முதல் தொடங்கியது. படிப்படியாக போக்குவரத்த உயர்த்தப்பட்டு, தற்போது தமிழகம் முழுவதும் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளும், 600 விரைவு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போதுபயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தேவைக்கு ஏற்றார்போல், பல்வேறு வழித்தடங்களில் கூடுதலாக 200 பேருந்துகள் இயக்க தமிழகஅரசு போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கூறிய அரசு போக்குவரத்துக் கழக உயரதிகாரி ஒருவர், தமிழக அரசின் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோரும், வெளி மாவட்டங்களுக்கும் பயணிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், விரைவுப் பேருந்துகளில் கூட்ட நெரிசல் இருப்பதாக பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு கூடுதலாக 200 சொகுசு பேருந்துகளை இயக்க தயாராகி வருகிறாம். ஓரிரு நாளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.