சென்னை

சென்னையில் உள்ள ஐடி நிறுவன பாதையில் சுங்க கட்டணம் திடீரென தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத்தால் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை நகரில் மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சிறுசேரி வரை உள்ள பகுதியில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ளன.  இங்கு தினசரி சுமார் 1.5 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன.  தற்போது பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணி புரிய அனுமதித்துள்ளதால் அதிகம் போக்குவரத்து இல்லை

கடந்த சில நாட்களாக ஐடி நிறுவனங்கள் சிறிது சிறிதாக பணியாளர்களை அலுவலகத்தில் இருந்து பணி புரிய அழைத்து வருகின்றன.  இங்குள்ள சாலைகளில் செல்ல தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனம் சுங்க கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த சாலைகளில் சுங்க கட்டணம் கடந்த 2006 ஆம் வருடம் ஜூலை 1 முதல் 2036 ஆம் வருடம் ஜூன் 30 வரை அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனம் சுங்கக் கட்டணத்தை அதிகரித்துள்ளது.   இதனால் ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியை முழு அளவில் தொடங்கும் போது இந்த சாலைகளில் பயணம் செய்வோர் அதிக அளவில் கட்டணம் செலுத்த நேரிடும்.

ஏற்கனவே கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள போக்குவரத்து துறை இந்த கட்டண உயர்வால் மேலும் பாதிக்கப்படும் எனத் தமிழக பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் முகமது அஃப்சல் வருத்தம் தெரிவித்துள்ளார்.