திருவாரூர் மாவட்டம் தளவாயிருப்பு என்ற கிராமத்தை சேர்ந்த சுகுமாரின் மனைவி மதுபாலா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
மதுபாலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே சுகுமார் பிரசவம் பார்த்துள்ளார்.
மதுபாலாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த ஆவூர் ஆரம்ப சுகாதார மைய அலுவலர் கிருத்திகா, சுகுமார் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளார்.
‘ சமூக வலைத்தளங்களில் பெண்கள் பிரசவிக்கும் வீடியோ காட்சிகளை பார்த்துள்ளேன். அந்த ‘டெக்னிக்கை’ பயன்படுத்தி தனது மனைவிக்கு பிரசவம் பார்த்ததாக சுகுமார் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ந்து போன டாக்டர் கிருத்திகா, ‘’போகட்டும்,, உங்கள் மனைவியை ஆரம்ப சுகாதார மையத்துக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வாருங்கள்’’ என்று கூறியுள்ளார். ஆனால் ‘ஆஸ்பத்திரிக்கெல்லாம் வர முடியாது’’என்று அலட்சியமாக சுகுமார் கூறியதால், கிருத்திகா இது குறித்து வலங்கைமான் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் சுகுமார் வீட்டுக்கு விசாரணை நடத்த சென்றபோது, வீடு பூட்டிக்கிடந்தது. போலீசுக்கு பயந்து, குழந்தை மற்றும் மனைவியுடன் சுகுமார், தலைமறைவாகி இருந்தார்.
அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீடியோவை பார்த்து மனைவிக்கு கணவன் பிரசவம் பார்த்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பா.பாரதி.
[youtube-feed feed=1]