சென்னை: உடல்நலக்குறைவாயில் உயிரிழந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் அவரை பண்ணை வீடான தாமரைப்பாக்கத்தில் வைக்கப்பட்டுஉள்ளது. இன்று முற்பகல் அவரதுஉடல் அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 50 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் நேற்ற பிற்பகல் சிகிக்சை பலனின்றி காலமானார். அவரது உடல் நேற்று மாலை 4 மணி அளவில், நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் எஸ்பிபியின் உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு வாகனத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது. புழல், செங்குன்றம் பகுதிகளில் எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் சாலையில் குவிந்ததால் உடலை பண்ணை வீட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
அவரது உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பண்ணை வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு உறவினர்கள் மட்டுமே பண்ணை வீட்டில் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று காலை 7 மணி முதல் திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று 10 மணி முதல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கான பணிகள் தொடங்கி 12 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக எஸ்.பி.பி.யின் உடலுக்கு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளதால், அங்கு காவல்துறையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
எஸ். பி. பி. யின் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்வதற்காக, பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகிறது.
தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதியில்லை என திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் தெரிவித்து உள்ளார். பண்ணை வீட்டுக்கு 2 கி.மீ. முன்பாகவே தடுப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.