பாடும் நிலா

பா. தேவிமயில் குமார்

தேநீர்க் கடையிலும்,

தெருவோரங்களிலும்,

இரவுத் தொழிலாளர்களுடனும்,

இரங்கல் வீட்டிலும்,

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடனும்,

புது வருடப் பிறப்பிலும்,

குழந்தையைத் தாலாட்டும்போதும்,

குளியலறை மெல்லிசையிலும்,

பசி கொண்ட வறுமையிலும்,

பால் நிலாவை ரசிப்பதிலும்,

காதல் உணர்வு மேலோங்கியபோதும்

கல்யாண வாழ்வை ரசிக்கும்போதும்,

 

ஓடி வந்து எங்கள் காதுகளுக்குள்

ஓசையாய் நுழைந்த நீ …..

இன்று எங்கு சென்றாய் பாடகனே !

 

உணர்வுகளால் எங்களைக் கட்டிப்

போட்டு விட்டு, இன்று

உணர்வற்று கிடப்பதேன் ?

 

ஏழிசைப் பற்றியெல்லாம்

எங்களுக்கு எதுவும் தெரியாது,

இசையென்றால், நீ மட்டும் தான் !

 

காதலின் தீபத்தையும்,

கல்யாண மாலையையும்,

வானிலே தேனிலாவையும்,

வாழ்வே மாயத்தையும்,

இளைய நிலா பொழிவதையும்,

இதயமே, இதயமே, என உருகுவதையும்,

ஆயிரம் நிலவுகளையும்,

ஆசைக் கனவுகளையும்

அள்ளித் தந்த தேன் குரலே !

 

காலை எழுந்தது முதல் இரவு

கண்மூடி உறங்கும் வரையிலும்

எங்கள் வாழ்க்கையோடு பயணித்த

எங்கள் உணர்வுகளின் பாடகனே !

 

அன்று உன்னை பாட்டனும் ரசித்தான்

இன்று பேரனும் ரசிக்கிறான்,

தலைமுறைகள் கடந்த பாட்டுடைத்

தலைவன் நீயன்றோ ?

 

இறைபாடல்களையும் நீ

இசைத்த போது மயங்கினோம்,

அந்த இறைவனும் மயங்கியதால்

உன்னை அழைத்துக் கொண்டானோ ?

 

கனவுத் தொழிற்சாலையின் முடிசூடா

கதாநாயகன் நீயல்லவோ ? எங்கள்

வாழ்க்கையோடு ஒன்றிய நீ

வாழ்ந்தது போதுமென நினைத்து விட்டாயோ ?

 

நீ எங்கு சென்றாலும் எங்கள்

நினைவுகள் உன் குரலுடன்

நீந்திய வண்ணமே இருக்கும்,

நித்ய வரம் பெற்ற எங்கள் பாடகனே !

 

ரசிகர்களின் இதயத் துடிப்பே,

ராகம் பாடிய ராகவனே,

இன்று நீ ஓய்வெடுத்தாலும்

உன் பாடல்களை ஓய்வெடுக்க

அனுமதிக்க மாட்டோம் !

என்றென்றும் எங்கள் காதில்

இசைத்திடும் “பாடும் நிலாவே”

எழுந்து வா ! இசையோடு !

காத்திருக்கிறோம் ! உன்

கானங்களைக் கேட்டவாறே !