சென்னை: தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர், தினேஷ் குண்டுராவ், தமிழகத்தில், திமுக, காங்கிரஸ் கூட்டணி வரும் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைபற்றி ஆட்சி அமைக்கும் என கூறினார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் முதன்முறையாக சென்னை வருகை தந்தார். முன்னதாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்தியா காங்கிரஸ் கட்சி உறுப்பினர் வாழப்பாடி இராமசுகந்தன் உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்தவர், அங்குள்ள காமராஜர் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மோடி தலைமையிலான பாஜக அரசு சர்வாதிகார ஆட்சியை நடத்துகிறது. நாட்டில் ஒற்றை அதிகாரத்தை கொண்டு வர முயல்கிறது. மாநில அரசுகளுக்கான நிதிகளை குறிப்பிட்ட நேரத்தில் வழங்காமல், மத்திய அரசு தர காலம் தாழ்த்தி வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க சரியான திட்டமிடல் இல்லை. இந்த அச்சுறுத்தலிலும், பணம் சம்பாதிக்கவே மத்தியஅரசு நினைக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு ஒதுக்கிய 20 லட்சம் கோடி நிது உதவி ஏமாற்று வேலை.
திறமையற்ற மோடி அரசின் நிர்வாக கோளாறு காரணமாக ஏற்கனவே நாட்டின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வந்த நிலையில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நாட்டின் பொருளதாரம் மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளை விட இந்தியா பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளது.
மத்தியஅரசு தற்போது கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கையில் மாநில அரசின் அதிகாரத்தை பிடுங்கிக்கொள்கிறது. குறிப்பாக நீட் விவகாரத்தில் மாணவர்கள் எப்படி தயாராக வேண்டும் என மத்திய அரசுதான் முடிவு செய்கிறது. இந்த விஷயங்களில், மாநில அரசுகள், மத்திய அரசை நாட வேண்டிய சூழலை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசின் அதிகாரங்களை பறித்து வருகிறது.
அதுபோல, சமீபத்தில் கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திருத்தம், நாட்டில் விவசாயத்தையும், விவசாயிகளையும், முழுமையாக அழித்துவிடும். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியவில்லை. எதிர்கட்சிகளின் குரலை நசுக்கி இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாய சட்டத்திருத்ததிற்கு எதிராக 2 கோடி கையெழுத்துக்களை பெற்று நவம்பர் 14ம் தேதி குடியரசு தலைவரை சந்தித்து கொடுக்கப்படும்.
இவ்விவகாரத்தில் காங்கிரஸ் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைக்கும். மத்தியஅரசுகுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும். இந்த விஷயத்தில், மத்தியஅரசுக்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு எதிராக இந்த சட்டத்தை எதிர்க்கட்சிகளுடன் இணைந்து எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும். துரதிஷ்டவசமாக அமைதி காக்கிறது. பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.
தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும்.
மேகதாது விவகாரம் இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனை. இதற்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. இதில் மக்கள் நலனை சார்ந்து தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, முன்னாள் தலைவர்கள் எஸ்.திருநாவுக்கரசர், இவிகேஎஸ் இளங்கோவின், கே.வி.தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.