சென்னை: தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடி உடனடியாக ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி, தொற்று பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம் உள்பட 7 மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்தியஅரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடடினயாக 1000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் மருத்துவ உட்கட்டமைப்பை மேம்படுத்த 3000 கோடி ரூபாய் தேவை என வலியுறுத்தியதுடன், நீட் தேர்வில் 7.5% உள் ஒதுக்கீடு அறிவிப்பை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
மேலும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உணவு தானியங்களுக்கு நிலுவைத் தொகையான 1,321 கோடி ரூபாயை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
முன்னதாக கொரோனா குறித்து, பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெரும்பாலான கொரோனா தொற்றுகள் அறிகுறிகள் இல்லாமல் இருப்பதால் பயனுள்ள தகவல்கள் அவசியம் என தெரிவித்தார். நோய்த்தொற்றின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடுவதிலும் சிலர் தவறு செய்வதாக தெரிவித்த பிரதமர் பயனுள்ள சோதனை, தடமறிதல், சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் தெளிவான தகவல்கள் ஆகியவற்றில் கவனத்தை அதிகரிக்க வேண்டும் என மாநில அரசுகளை அறிவுறுத்தினார்.
அத்தோடு தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளையும் பிரதமர் பாராட்டி உள்ளார். இவ்வாறு த தமிழகஅரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.