புதுடெல்லி:
8 எம்.பி.,க்கள் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் இன்று மட்டும் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் வேளாண் மசோதாவை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து 8 எம்.பி.,க்களை ஒரு வாரம் இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்.பி.,க்கள் இன்று அதனை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.,க்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இன்று மட்டும் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘மாநிலங்களவையை முறையாக நடத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காமல் குரல் வாக்கெடுப்பு மூலம் அவைத் துணை தலைவர் ஹரிவன்ஷ், மசோதாக்களை நிறைவேற்றியது சரியல்ல. கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு நிகழ்வை நான் கண்டது இல்லை’ என்று தெரிவித்துளார்.