டெல்லி: ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக் கப்படுவதாக, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.
மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன. மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் அமளிகளுக்கு இடையே மசோதா நிறைவேற்றப்பட்டது.
நேற்று மாநிலங்களவையில் வேளாண் மசோதா மீதான விவாதத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்ததுடன், அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகம் உள்ளிட்ட காகிதங்களை கிழித்து வீசினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியதும், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனால், ராஜ்யசபா துணைத்தலைவர் மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடுமையாக குற்றம் சாட்டினர். அரசுக்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில், குளறுபடி செய்து கமசோதாவை நிறைவேற்றியதாக குற்றம்சாட்டின.
தொடர்ந்து, அவையை நடத்திய துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக மனு அளித்தனர்.
இந்த சூழ்நிலையில் மாநிலங்களவை இன்று காலை 9 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது நேற்று அவையில் நடந்த அமளி குறித்து, அதிருப்தியை தெரிவித்த வெங்கையாநாயுடு, அமளியில் ஈடுபட்ட டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட 8 உறுப்பினர்களை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும் அவையின் துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.
அவைத்தலைவரின் அறிவிப்பை தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனையடுத்து அவையை 10 மணி வரை ஒத்திவைத்தார். 10 மணிக்கு மீண்டும் அவை நடவடிக்கை தொடங்கியது.