கோவை: கோவை அருகே தண்ணீர் நிரம்பிய பக்கெட்டில் விளையாடிய குழந்தை நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் யுவராஜ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் அபுல் உசேன், தசீனா தம்பதிக்கு 3 வயது பெண் குழந்தையும், 9 மாத ஆண் குழந்தை உள்ளனர். அசாம் மாநிலத்தின் ரூபாலி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இந்த தம்பதியினர் 3 ஆண்டுகளாக தொண்டாமுத்தூர் பகுதியில் பாக்கு தோட்டத்தில் வேலை செய்து வருகின்றனர்.
நேற்றிரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன் பின்னர் அனைவரும் தூங்கி விட்டனர். பின்னர் அதிகாலையில் எழுந்த அபுல் உசேன் பாக்கு வேலைக்கு சென்றுவிட தாமதமாக எழுந்த தசீனா தனது அருகே படுத்திருந்த ஆண் குழந்தையை காணாமல் தேடினார்.
வீட்டிற்கு வெளியே பிளாஸ்டிக் தண்ணீர் பக்கெட்டில் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. தவழ்ந்து சென்று பக்கெட் தண்ணீரில் விளையாடிய போது, குழந்தை அதில் தலைகீழாக விழுந்து மூச்சு திணறி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.