தராபாத்

ட்டிட உரிமையாளர்களே சுய சான்றிதழ் வழங்கி ஒப்புதல் பெற உதவும் புதிய மசோதாவுக்குத் தெலுங்கானா சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய கட்டிடம் கட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சி விதிகளின்படி அனுமதி பெறுவது மிகவும் கடினமாக உள்ளது.   இதற்காக விதிமுறைகளின்படி உள்ளதாக அதிகாரிகளின் சான்றிதழ் பெற்ற பிறகே ஒப்புதல் பெற முடிகிறது.   இது பல நேரங்களில் மிகவும் தாமதத்தை உண்டாக்குகிறது.   மேலும் கட்டிட உரிமையாளர்களுக்கு இந்த சான்றிதழ் குறித்து எவ்வித பொறுப்பும் இல்லாத நிலையும் ஏற்படுகிறது.

இந்நிலையில் நேற்று தெலுங்கானா சட்டப்பேரவையில் தெலுங்கானா மாநில கட்டிட ஒப்புதல் மற்றும் சுய சான்றிதழ் திட்ட மசோதாவுக்கு நேற்று ஒருமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  இவ்வாறு வேறு எந்த மாநிலத்திலும் மசோதா இயற்றப்படவில்லை எனவும் இது நகராட்சி சீர்திருத்தத்தில் ஒரு மைல் கல் எனவும் தெலுங்கானா உள்ளாட்சி மற்றும் நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே டி ராமராவ் தெரிவித்துள்ளார்.

இந்த மசோதாவின்படி நகர்ப்புற தெலுங்கானா வாசிகள் 75 சதுர கஜம் மற்றும் வரை கட்டிடம் கட்ட உள்ளவர்களுக்கு அனுமதி தேவை இல்லை.  அத்துடன் 600 சதுர கஜம் வரை கட்டிடப் பரப்பளவு இருந்தால் அதற்கு சுய சான்றிதழ் அளிப்பதன் மூலம் உடனடி ஒப்புதல் பெற முடியும்.   600 சதுர அடி மற்றும் 10 மீட்டருக்கு மேல் உயரம் உள்ள கட்டிடங்களுக்கு 21 நாட்களுக்குள் ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்படும்.

இந்த மசோதாவில் அபராதத்துக்கான வழிமுறைகளும் உள்ளன,   ஒப்புதல் அளிக்கத் தாமதப்படுத்தும் அதிகாரிகளுக்கு இந்த மசோதா மூலம் அபராதம் விதிக்க முடியும்.    இந்த மசோதா மூலம் ஒப்புதல் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.   விண்ணப்பத்தில் சுய சான்றிதழ் அளிக்கும் கட்டிட உரிமையாளர்கள் கட்டிட விதிகளுக்குட்பட்டு நடப்பதாகவும் விதி மீறல் நடந்தால் கட்டிடத்தை நகராட்சி நிர்வாகம் இடிக்கலாம் எனவும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.