பெங்களூரு
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை ஆகலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவர் தோழி சசிகலா மேலும் இருவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இறுதித் தீர்ப்புக்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டார். இதனால் மற்ற மூவருக்கும் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டு அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர்.
இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் சசிகலா விடுதலை குறித்து தகவல் உரிமை சட்டத்தின் மூலம் கேள்விகள் எழுப்பி இருந்தார். அதற்குப் பெங்களூரு சிறைத்துறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அதில் சசிகலா வரும் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சசிகலா முன் கூட்டியே விடுதலை ஆவார் என்னும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பதிலில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடி அபராதத்தை அவர் அவசியம் செலுத்த வேண்டும் எனவும் தவறினால் விடுதலை மேலும் ஓராண்டு தள்ளிப்போகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.