பெங்களூரு: கொரோனா காரணமாக கர்நாடகாவில் 50 ஆயிரம் சிறிய கடைகள் மூடப்படவேண்டிய நிலையில் இருப்பதாக கர்நாடக வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்புகளின் கூட்டமைப்பு கூறி உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா தொற்று இப்போது உச்சக்கட்டத்தில் உள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 4.59 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.
பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துவிட்டது. இன்னமும் 99 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந் நிலையில் கொரோனா எதிரொலியாக, 50 ஆயிரம் சிறிய கடைகள் மூடப்படவேண்டிய நிலையில் இருப்பதாக கர்நாடக வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்புகளின் கூட்டமைப்பு கூறி உள்ளது.
இது குறித்து அந்த கூட்டமைப்பின் லஹோதி தெரிவித்து உள்ளதாவது: எங்கள் கணக்கெடுப்பின்படி, கர்நாடகாவில் 50,000 சிறிய கடைகள் மூடப்பட வேண்டியிருக்கும்.ஏனெனில் வாடகை செலுத்த முடியவில்லை. வேறு எந்த மூலதனம் இல்லை. வங்கிகளிடமிருந்து எந்த உதவியும் இல்லை. அதனால் தான் அவற்றை புதுப்பிக்க அரசாங்கத்திடமிருந்து சில நிதி உதவிகளை நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.