திருவனந்தபுரம்: சர்ச்சைக்குரிய தங்கக் கடத்தல் வழக்கில் கேரள அமைச்சர் ஜலீலிடம் அமலாக்க இயக்குநரகம் விசாரணை நடத்தி உள்ளது.

ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, அமீரக துணைத் தூதரின் முன்னாள் நிர்வாக செயலாளர் ஸ்வப்னா சுரேஷ், அமீரக முன்னாள் பிஆர்ஓ சரத்குமார் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷுடன் தொடர்பு வைத்திருந்த முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை என்ஐஏ, சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறை ஆகிய 3 அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

இந் நிலையில் தங்கக் கடத்தல் வழக்கில் கேரள அமைச்சர் ஜலீலிடம் அமலாக்க இயக்குநரகம் விசாரணை நடத்தி உள்ளது. அவரிடம் விசாரிக்கப்பட்டதை அமலாக்கத்துறை இயக்குநர் மிஸ்ரா உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்த வழக்கில் சிபிஐ (எம்) தலைவரை கொச்சியில் உள்ள தனது அலுவலகத்திற்கு வரவழைத்து, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகத்துடன் அவர் நடத்திய நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க சட்ட அமலாக்க நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது.

முன்னதாக தங்க கடத்தல் வழக்கு விஸ்வரூபம் எடுத்த போது, ரமலான் மாதத்தில் தூதரகம் வழங்கிய ரூ .5 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண கருவிகளை விநியோகிப்பது தொடர்பாக ஸ்வப்னா சுரேஷுடன் தொடர்பு கொண்டிருந்ததாக ஜலீல் தெரிவித்திருந்தார். அவர் 2019 ல் தூதரகத்திலிருந்து ராஜினாமா செய்தார் என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.