மாஸ்கோ: ரஷ்யாவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன அமைச்சர் வாங் யி ஆகியோர் சந்தித்து பேசினர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது.  முன்னதாக கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இடையேயான கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

தற்போது கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இடையேயான கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்க இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாட்கள் முன்பு மாஸ்கோ சென்றடைந்தார்.

4 நாட்கள் அரசுமுறைப்பயணமாக சென்ற அவரை ரஷிய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் வரவேற்றனர். தலைநகர் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டத்தில் பங்கேற்ற பின் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்து பேசினார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்ச்ர் செர்கே லாவ்ரோவ் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. சந்திப்பில், எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.