சென்னை: 7 மாதங்களில் திமுக ஆட்சி என்ற இலக்கை அடைய தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்பான வரலாற்றில் ஒரு பொருள் செறிந்த நாளாக மாறியிருக்கிறது செப்டம்பர் 9.  கழகத் தோழர்களுக்கு  செப்டம்பர் மாதம் எப்போதுமே களிப்புமும், ஊக்கமும் தரும் மாதம்தான்.

செப்டம்பர் 15 – பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாள். செப்டம்பர் 17 – ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் பிறந்தநாள். அதே நாள்தான், நம் கழகமும் பிறந்தநாள்! எனவே, முப்பெரும் விழாவாக அதனை நாம் கொண்டாடி மகிழ்வது வழக்கம். திருவிழாவுக்கு முன் பந்தற்கால் நடுவது போல, இந்த முப்பெரும் விழாவுக்கு முன்பாக, நேற்றைய செப்டம்பர் 9 சிறப்பான நாளாக அமைந்துவிட்டது.

இந்திய அரசியலைத் திரும்பிப் பார்க்கச் செய்யும் வலிமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எப்போதுமே உண்டு என்பதைப் பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் பல முறை நிரூபித்திருக்கிறார்கள். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்போதும், உங்களின் உழைப்பாலும் – தமிழக மக்களின் பேராதரவாலும், தி.மு.கழகத்தை இந்திய ஒன்றியமே திரும்பிப் பார்த்து வியப்படைந்தது.

நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக, தி.மு.கழகம் தன் வலிமையைக் காட்டியது. இப்போது, கொரோனா காலத்தில் அரசியல் பணிகள் பலவும் முடங்கியுள்ள நிலையில், பொதுக்கூட்டங்கள் – பேரணிகள் – மாநாடுகள் இவற்றிற்கு அனுமதி இல்லாத சூழலில், 3500-க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களைக் கொண்ட பேரியக்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தைக் காணொலி வாயிலாக நடத்துவதென்பது சாத்தியமாகுமா என்கிற சந்தேகம் அனைத்துத் தரப்பிலும் இருந்தது.

கேள்விக்குறிகளை ஆச்சரியக்குறிகளாகவும், ஆச்சரியக்குறிகளைக் கேள்விக்குறிகளாகவும் மாற்றுகின்ற வலிமை, எளிய மக்களின் இனிய இயக்கமான தி.மு.கழகத்திற்கு உண்டு என்பதை, கடந்த 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து நிரூபித்து வருகிறோம். காணொலி வாயிலான பொதுக்குழுவும் அப்படிப்பட்டதுதான். கழகத்தின் மாநில மாநாடு நடைபெறுவதற்கு முன்பாக, மாவட்ட மாநாடுகள் வரிசையாக நடைபெறும்.

அதில் கிடைக்கின்ற ஊக்கமும் அனுபவமும் மாநில மாநாட்டைச் சிறப்பாக நிறைவேற்றிட உதவும். அப்படித்தான், இந்தக் கொரோனா நோய்த் தொற்றினால் உருவாகியுள்ள ஊரடங்குக் காலத்தில்,  ஒவ்வொரு நாளும் காணொலி வாயிலாகவே தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகளான உங்களைச் சந்தித்து வந்தேன். மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய – நகர நிர்வாகிகள், கழகத்தின் மற்ற அமைப்புகளின் நிர்வாகிகள், துணை அமைப்புகளின் பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் எனக் காணொலி வாயிலாக நாள்தோறும் சந்திப்புகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன.

மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தையும் காணொலி வாயிலாக நடத்தினோம். இந்தத் தொடர் அனுபவங்களும், அதனால் கிடைத்த ஊக்கமும்தான், அனைத்து மாவட்டக் கழக நிர்வாகிகளின் முழுமையான உற்சாகமான ஒத்துழைப்புடன் செப்டம்பர் 9 அன்று காணொலி வாயிலான பொதுக்குழுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திட முடிந்தது. செப்டம்பர் 8-ம் தேதி முழுவதும் அதற்கான ஒத்திகைகள் முழு வீச்சில் நடந்தன.

தலைமைக் கழக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கிலிருந்து கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியினர், தொழில்நுட்ப வல்லுநர்கள், கழக நிர்வாகிகள், கலைஞர் தொலைக்காட்சிக் குழுவினர் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றினர். ஒவ்வொரு மாவட்டக் கழகத்திலும் காணொலிக் காட்சிக்கான ஏற்பாடுகள் எப்படி அமைந்துள்ளன, அரங்க அமைப்பு எப்படி உள்ளது, ஒலி – ஒளி தடங்கலின்றி இருக்கிறதா என்பதையெல்லாம் மிகுந்த ஆர்வத்துடனும் அக்கறையுடனும் கவனித்தார்கள். மாவட்டக் கழக நிர்வாகிகளும் அதே அக்கறையுடன் செயல்பட்டனர்.

வழக்கமான பொதுக்குழு என்றால், அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தில் இடம்கொள்ளாத அளவுக்குக் கூட்டம் கூடி இருக்கும். ஆனால், நேற்றைய பொதுக்குழுவில் தனிமனித இடைவெளிக்கேற்ப நாற்காலிகள் போடப்பட்டு, மாநில அளவிலான நிர்வாகிகளும், சென்னை மாவட்டக் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர்களும்தான் கலந்துகொண்டனர். அதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கலைஞர் அரங்கம் உருவானதுபோல, மிகச் சிறப்பான முறையிலே பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற காணொலிக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டங்களில் மட்டுமல்ல, மும்பை, கர்நாடகம், ஆந்திரா, அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி – காரைக்கால் எனப் பிற மாநிலங்களில் உள்ள கழக அமைப்பினரும் காணொலிக் கூட்டத்தில் பங்கேற்றது வெகு சிறப்புக்குரியது. ஊரடங்கு நேரத்தில் நடைபெற்ற காணொலி நிகழ்வுகளின்போது, பேரூர் கழக நிர்வாகிகளிடம் பேசிய வேளையில் தங்களையும் பொதுக்குழு உறுப்பினர்களாக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்தனர்.

அதனால், கழக அமைப்பின் சட்டதிட்டங்களில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பேரூர் கழகச் செயலாளர்களும் இம்முறை பொதுக்குழு உறுப்பினர்களாகப் பங்கேற்றனர். அதுமட்டுமல்ல; அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்த காணொலி வாயிலான பொதுக்குழுவுடன், மற்ற பல இடங்களின் காணொலி நிகழ்வுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியிலும் மேலும் சில தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பானதால், பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் முழுமையாகக் காணும் வாய்ப்பைப் பெற்ற முதல் பொதுக்குழு என்ற சிறப்பும் சேர்ந்தது.

தொழில்நுட்பத் தடங்கலின்றி – நேர்த்தியாக – ஒவ்வொருவரின் கருத்துகளும் தெளிவாகக் கேட்கும் வகையில் வெற்றிகரமாக இதனை நடத்திக் கொடுத்து, இந்திய அரசியலில் புதிய தடம் பதிக்கச் செய்து  இதுவரை யாரும் கண்டிராத புதுமையைச் சாத்தியப்படுத்திய அத்தனைப் பேருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து அமையவிருப்பது திமுக அரசுதான் என்ற மக்கள் மனதில் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள தீர்ப்பை, வாக்குப்பதிவு நாளில் உறுதிப்படுத்தும் வகையில் பணியாற்றிட சூளுரைத்துக் களம் காணுங்கள். 7 மாதங்களில் திமுக ஆட்சி எனும் இலக்கை அடைந்து, அதனை நம் உயிர்நிகர் தலைவரின் ஓய்விடத்தில் காணிக்கை ஆக்குகின்ற வெற்றித் திருநாள் வரை நமக்கு ஓய்வில்லை என்று கூறி உள்ளார்.