விழுப்புரம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வுகள் செய்து வரும் நிலையில், பல்வேறு புதியஅறிவிப்புகளையும், நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

அப்போது,  ரூ.2500 கோடி செலவில் திண்டிவனத்தில் உணவுப்பூங்கா அமைக்கப்படும்,  மரக்காணம் கூனிமேட்டில் ரூ.1450 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம். வானூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை பார்வை திண்டிவனத்தில் உணவுப்பூங்கா, வானூரில் கல்லூரி உள்பட பல திட்டங்கள்! விழுப்புரத்தில் முதல்வர் அறிவிப்புயிட்டார்.  விழுப்புரம் மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை  நடத்தினார்.

தொடர்ந்து,  விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்ட்ம் நடத்தப்பட்டது. அதுகுறித்து மாவட்ட நிர்வாக்ம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில்,

முதலமைச்சர் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டம் மூலம்  மாவட்டத்தில்  70,617 மனுக்கள் பெறப்பட்டு 20,751 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதில், 5,589 பட்டா மாறுதல் மனுக்களும், முதியோர் ஓய்வூதியம் வேண்டி சுமார் 7,965 மனுக்களும் தேர்வு செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2019-–20 நிதியாண்டில் 6,647 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா இம்மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டம் மூலம் சுமார் 171 பணிகள் தேர்வு செய்யப்பட்டு, அதில் பெரும்பாலானவை முடிக்கப்பட்டுள்ளன, சில பணிகள் நடைபெற்று வருகின்றன.

அமைச்சரும், பொதுமக்களும் வைத்த கோரிக்கையின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை யின் கீழ் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. வீடூர் அணை 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். நீண்ட நாள் கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டம் சுமார் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் தொடங்கப்படும்.

விழுப்புரம் நகரத்தில் பாதாள சாக்கடை திட்டம் ஏற்கனவே ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. விழுப்புரம் நகரம் விரிவாக்கம் செய்யப்பட்டது 252 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற 268 கோடி ரூபாயில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கடல்நீரை தடுக்க ரூ.121 கோடி திட்டம்

மரக்காணம் வட்டம், கல்வேலி ஏரியில் கடல்நீர் உட்புகாமல் இருப்பதற்கு ரூபாய் 121 கோடி மதிப்பீட்டில் அதனை சீரமைக்கும் பணி விரைவில் துவங்கப்படும். திண்டிவனத்தில் சிப்காட் சார்பாக உணவுப் பூங்கா ஒன்று அமைக்க ரூ.2500 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு 4 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடிய வகையில் சூழ்நிலை உருவாகும்.

நீண்ட காலமாக பத்திரிக்கை நண்பர்கள் வீட்டு மனைப்பட்டா வேண்டும் என்று வைத்த கோரிக்கைகளை ஏற்று, 53 பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கிய அரசும் அம்மாவின் அரசு.

வானூரில் கல்லூரி

விழுப்புரம் மாவட்டம் வானூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு இவ்வாண்டு மாணவர் சேர்க்கையும் தொடங்கப்படும். இந்த மாவட்ட மக்களுக்கு ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் அரசு சட்டக் கல்லூரியையும் கொடுத்துள்ளோம். சட்டத் துறை அமைச்சர், அந்த சட்டக் கல்லூரிக்கு ரூபாய் 5 கோடி செலவில் நூலகத்தை கட்டித் தந்திருக்கின்றார். இந்த நூலகம் பெங்களூரில் உள்ள நூலகத்திற்கு இணையாக உள்ளது.

2017–-18–ம் ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி ஒன்று உருவாக்கித் தரப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், பி.எட் கல்லூரிக்கு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது, விரைவில் பி.எட் சேர்க்கை நடைபெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும். இங்கு இயங்கி வரும் திறந்தவெளி பல்கலைக் கழகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. இம்மாவட்டத்தில் 4 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 7 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான தொழிலான வேளாண் தொழிலை நம்பி சுமார் 70 சதவீத விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் நெல், கரும்பு, கடலை, சிறு தானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், சென்னைக்கருகில் இருக்கின்ற காரணத்தினால் விவசாயிகள் அதிக வருமானம் பெறுவதற்கு காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், திருவெண்ணெய்நல்லூர் என்ற பகுதியில் கொய்யாப்பழம் அதிகளவு விளைவிக்கப்பட்டு, விற்பனைக்கு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு உழைப்பிற்கு பெயர் பெற்ற மாவட்டம் விழுப்புரம் மாவட்டம்.

ரூ.1450 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

நீண்ட, நெடிய நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க மரக்காணம் அருகிலுள்ள கூனிமேட்டில் ரூபாய் 1,450 கோடி மதிப்பீட்டில் 60 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதன் மூலம் விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிகள், மரக்காணம், காணை, விக்கிரவாண்டி, மைலம், உளுந்தூர்பேட்டை ஒன்றியங்களிலுள்ள 692 குடியிருப்புகளில் சுமார் 7.50 லட்சம் மக்கள் குடிநீர் வசதி பெறுவார்கள்.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தையும் உள்ளடக்கிய விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டுகளில் 3.41 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 293.35 கோடி இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை. இதற்கு முன்பு இவ்வளவு பெரிய தொகையை இழப்பீடாக பெற்றுத் தந்த சரித்திரம் கிடையாது. அந்தச் சரித்திரத்தை அம்மாவின் அரசு படைத்துள்ளது.

இவ்வாறு  பழனிசாமி கூறியுள்ளார்.