விழுப்புரம்: கொரோனா  முடக்கத்தில் இருந்து பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி வழங்ககப்பட்ட நிலையில், புதுச்சேரி வழியாக செல்லும் பேருந்துகளுக்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்து வந்தது. இந்த நிலையில் இரு மாநில அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இன்றுமுதல்  தமிழக அரசு பஸ்கள் புதுவை வழியாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 7ந்தேதி முதல் பொது போக்குவரத்து தொடங்கி உள்ள நிலையில் புதுவை மாநிலம் வழியாக பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

ஒரு மாநிலத்துக்கு சொந்தமான பஸ் பிற மாநில வழித்தடத்தில் செல்ல வேண்டும் என்றால் அதற்கு அனுமதி பெற வேண்டியது அவசியம். இது குறித்து விதிகள் வகுக்கப்பட்டு மாநிலங்களுக்கிடையே ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி தமிழக அரசின் அனுமதி பெற்று காரைக்காலுக்கு தற்போது புதுச்சேரி அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில் புதுச்சேரி வழியாக தமிழக அரசு பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு புதுவை மாவட்ட கலெக்டர் தற்போது அனுமதி வழங்கியுள்ளார்.

இதில், தமிழக அரசு பஸ்கள் சென்னையில் இருந்து கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளுக்கு புதுவை மாநில சாலைகள் வழியாக செல்லலாம். ஆனால் பயணிகள் யாரையும் ஏற்றி இறக்கக் கூடாது. புதுவை எல்லை பகுதிகளில் பஸ்களை நிறுத்தக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று முதல் சென்னையில் இருந்து கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை செல்லும் தமிழக அரசு பஸ்கள் புதுவை வழியாக சென்று வரத் தொடங்கி உள்ளன.

புதுவையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பஸ்களை இயக்குவதற்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. எனவே புதுவையில் இருந்து வெளியிடங்களுக்கு பஸ்களை இயக்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]