சென்னை: கொரோனா தொற்று காரணமாக, பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி அறிவிக்கப்பட்டதுடன், தேர்வுக்கு பணம் கட்டிய அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழகஅரசு அறிவித்தது. இதற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், தனது அறிவிப்பை தமிழக உயர்கல்வித்துறை வாபஸ் பெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சில சலுகைகளையும் வழங்கும் என நம்பப்படுகிறது.
இதற்கு அண்ணா பல்கலைக்கழகம் உள்பட கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கழகமான ஏஐசிடிஇ-ம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும், தமிழக அரசின் முடிவை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழகஅரசு, தனது அரியர் மாணவர்களின் தேர்ச்சி அறிவிப்பை வாபஸ் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்று காரணமாக கல்விநிலையங்கள், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக முடங்கி உள்ள நிலையில், ஏஐசிடிஇ, யுஜிஜி ஆலோசனையின்படி, இறுதிப்பருவத் தேர்வு தவிர மற்ற கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான மதிப்பெண் முந்திய செமஸ்டர் தேர்வுகளின் அடிப்படையில், உள் மதிப்பீட்டு அடிப்படையிலும் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், அரியர் வைத்திருக்கும் மாணவர்களும், தங்களுக்கும் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதையடுத்து, தமிழக அரசு அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் அந்த தேர்வு எழுதுவதற்காக தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தி இருந்தால் அந்த பாடங்களில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், கலை மற்றும் அறிவியல் பொறியியல் கல்லூரிகளில் அரியர் வைத்திருக்கும் ஏராளமான மானவர்கள் தேர்ச்சி பெறும் வாய்ப்பு ஏற்பட்டது. இதற்கு சில கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
ஆனால், மாணவர்கள் மத்தியில் அரசின் அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அரியர் மாணவர்கள் அதிமுக அரசை வாழ்த்தி பேனர், விளம்பரம் என அதகளப்படுத்தி வந்தனர்.
இதனிடையே, அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை ஏற்க முடியாது என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்(AICTE) கடிதம் அனுப்பி இருப்பதாக சூரப்பா கூறியிருந்தார். ஆனால், அதை தமிழகஅரசு மறுத்து வந்தது.
இந்த நிலையில், நேற்று தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே, அரியர் தேர்வை ரத்து செய்துள்ள தமிழக அரசின் முடிவு தவறானது என்று கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பான வழக்கில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்” என்று கூறியுள்ளார்.
இது, சந்தோஷத்தில் மிதந்த அரியர் மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் தலைவர் தமிழக உயர்கல்வித்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அப்போது தமிழகஅரசின் அறிவிப்பு குறித்து விவரிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
ஆனால், பொறியியல் போன்ற தொழில்நுட்ப படிப்புகளில் அரியர் மாணவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாமல், அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்பது ஏஐசிடிஇ திட்டவட்டமாக கூறியுள்ளதாக தெரிகிறது.
இதனால், அரியர் விவகாரத்தில் என்ன செய்வதென்று இருதலைக்கொள்ளி எறும்பாக தமிழகஅரசு தவித்து வருகிறது. இளைய சமுதாயத்தினரிடம் பெரும் வரவேற்பை பெற்ற அரியர் தேர்ச்சி அறிவிப்பை தமிழகஅரசு இன்று அல்லது ஓரிரு நாளில் ஏதாவது சாக்கு போக்கு கூறி வாபஸ் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், ஏஐசிடியிடம் பேசி, இறுதியாண்டு அரியர் தேர்வு தவிர, முதலாண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்களின் அரியர் தேர்வுகளுக்கு மட்டும் தேர்ச்சி கொடுக்கலாமா? அல்லது ஒன்று, இரண்டு பாடங்களில் மட்டும் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கலாமா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழகஅரசை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் முதல்வர் எடப்பாடி ஒளியேற்றுவாரா? அவர்களின் நம்பிக்கையை பொய்யாக்குவாரா? என்பது விரைவில் தெரிய வரும்.