சென்னை: இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை ரத்து செய்யும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தேர்வை ஒத்தி வைக்கக் கோரி பலரும் வழக்குகள் தொடர்ந்தனர்.
ஆனால் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் அழுத்தமாக தெரிவித்தது. இந்நிலையில், நீட் தேர்வுக்காக தயாராகி வந்த அரியலூர் மாணவர் விக்னேஷ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந் நிலையில் இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
நீட் பலிபீடத்தில் இன்னுமோர் உயிரிழப்பு, அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியில் மாணவன் விக்னேஷ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை ரத்து செய்யும். மேலும் மாணவர்களுக்கு என் அன்பு வேண்டுகோள்; எத்தகைய சோதனைகளையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; தற்கொலை எண்ணத்தை விடுங்கள் என்று தெரிவித்து உள்ளார்.