மும்பை: இந்த 2020ம் ஆண்டுக்காக உருவாக்கப்பட்ட ஐபிஎல் கீதம், கடந்த 2017ம் ஆண்டு தான் உருவாக்கிய கீதத்திலிருந்து திருடப்பட்டதாக இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் ராப் பாடகர் கிருஷ்ணா கவுல்.
இந்தாண்டு, ‘ஆயேங்கே ஹும் வாபாஸ்’ என்ற பெயரில் ஐபிஎல் கீதம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “பெரிய பின்னடைவிலிருந்து வலிமையுடன் மீண்டு வந்தோம்” என்ற அர்த்தம் அந்த கீதத்தில் அடங்கியுள்ளது.
இந்த கீதத்தின் இசை வீடியோவானது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தொலைவிலிருந்து ஐபிஎல் தொடரை பார்ப்பதாக உள்ளது.
இந்த கீதத்தை, யூடியூப்பில் 1.3 லட்சத்திற்கும் அதிகமானோரும், டிவிட்டரில் 3.6 லட்சத்திற்கு அதிகமானோரும் இதுவரை கண்டுகளித்துள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டு, தான் உருவாக்கிய கீதத்திலிருந்து, இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான கீதம் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், அதற்காக தன்னிடம் அனுமதி கேட்கப்படாததோடு, தனக்கான நன்றி அறிவிப்பும் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார் கிருஷ்ணா கவுல்.