டெல்லி: இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சினை மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. இந்திய ராணுவம் சீன படைகள் மீது துப்பாக்கி சூடு நடத்திதாக சீனா குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.
லடாக் எல்லை மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினை கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இந்த நிலையில், எல்லைப்பகுதியான தென்கரையில் பாங்கோங் த்சோ மற்றும் ரெசாங் லா அருகே ரெச்சின் லா ஆகிய இடங்களை, இந்தியா மீண்டும் கைவசப்படுத்தி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சில இடங்களில் அத்துமீறிய சீன படைகளை இந்திய ராணுவம் விரட்டியடித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சீனாவின் பி.எல்.ஏ வெஸ்டர்ன் தியேட்டர் கட்டளையின் செய்தித் தொடர்பாளர் கர்னல் ஜாங் ஷுய்லி, இந்தியா மீது குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், இந்திய இராணுவம் “எல்லை மீறி சீன-இந்திய எல்லையின் மேற்குப் பகுதியான பாங்கோங் ஹுனானுக்குள் நுழைந்தது” என்றும் “இந்திய நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை கடுமையாக மீறியுள்ளன, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒப்பந்தங்கள், பிராந்திய பதட்டங்களை அதிகரித்து, தவறான புரிதல்களையும் தவறான தீர்ப்புகளையும் எளிதில் ஏற்படுத்தும்” என கூறியுள்ளார்.
இதற்கிடையில், ரஷ்யாவில் நடைபெற்று வரும் மாநாட்டில், இந்தியா சீனாவுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் விதமாக பாதுகாப்பு மந்திரிகள் மட்டம் உள்பட பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றும், சீனா தனது பிடிவாதத்தில் இறங்கி வர மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலில், அருணாசலபிரதேசத்தில் உள்ள எல்லையோர கிராமத்தில் வேட்டைக்கு சென்ற 5 பேரை சீன ராணுவம் கடத்தி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது.
இது தொடர்பாக கூறிணு ராணுவ செய்தித்தொடர்பாளர் கர்னல் ஜாங், ”சீன ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. எனவே நிலமையை கட்டுக்குள் கொண்டு வர நாங்கள் பதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு ராணுவத்தினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் எல்லைப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.