திருச்சி: ஆன்லைன் வகுப்பு புரியாததால் முதலாமாண்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சோகம் திருச்சி அருகே நடந்தேறியுள்ளது. இது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, கல்விநிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, ஆன்லைன் மூலமே பாடங்கள் போதிக்கும் நடைமுறைகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த ஆன்லைன் வகுப்புகள் பலருக்கு புரியவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், இதன் காரணமாக சில தற்கொலைகளும் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில், திருச்சி அருகே முதலாமாண்டு கல்லூரி மாணவி ஒருவரும் ஆன்லைனில் நடத்தும் பாடங்கள் புரிய வில்லை என்று கூறி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் மளிகை கடை வைத்துள்ள வியாபாரி ஒருவரின் மகள். இந்த ஆண்டு , திருச்சி சத்திரம் அண்ணாமலை நகரில் உள்ள பெண்கள் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதலாமாண்டு சேர்ந்திருந்தார். கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் வகுப்பு நடந்து வருகிறது.
ஏற்கனவே பிளஸ்2 வரை தமிழ் மீடியம் படித்த லலிதாவிற்கு, ஆங்கில வழியில் பாடம் நடத்துவது சரியாக புரியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான லலிதா, அது தொடர்பாக பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். பெற்றோரும் அவரை சமாதானம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல் தந்தை, தாய், தம்பி என அனைவரும் மளிகை கடைக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில், வீட்டின் மின் விசிறியில் லலிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.