மடியாசனம் – மழலையர்க் கவிதைகள்

தொகுப்பு 5

பா. தேவிமயில் குமார்

 

பூனை

 

பூனை வரைந்த

பிஞ்சு,

ஆணையிட்டது,

அம்மா !

பாட்டிலில்

பால் எடுத்துவா !

பாவம், பூனைக்கு

பசிக்குமில்லை !

 

அசையா நினைவுகள்

 

வாய்ச்சண்டை உண்டு,

வாள் சண்டை இல்லை,

போராட்டம் உண்டு

போர்க்களம் இல்லை,

பிடிவாதமெல்லாம், அன்பால்

பொடிப்பொடியாகிறது !

கேட்டதெல்லாம்

கிடைத்தது ! அப்போது

அழுகை கூட அழகு என

அம்மா, அப்பா ரசித்தனர் !

என்ன செய்ய ?

வளர்ந்துவிட்டோமே ! இனி

வராது அந்தப் பருவம் என

வயோதிக காலத்திலும்

அசை போடக்கூடிய

“அசையா நினைவுகள்”

இளமைப் பருவமல்லவா ?

 

நித்ய சாபம்

 

சிவப்பு நீ, எனவும்

கருப்பு நீ எனவும்

குழந்தைகளிடம், நாம்

கொஞ்சும் வேளையில், உலகில்

எங்கோ ஒரு

இனப்போராட்டம்

வெடித்துக் கொண்டே

இருக்கிறது !

நிறவெறி எனும்

நித்ய சாபத்தால்

 

பிறந்தநாள்

 

ஒவ்வொரு

வருடமும்

வளர்கின்ற

குழந்தைக்குக்

கொஞ்சம் கூட

தெரியாது தான்,

“குழந்தையெனும்”

மகுடம், அதனிடமிருந்து

மெதுவாகப்

பறிக்கப்படுகிறதென !

 

அம்மா

 

அம்மாவின்

முத்தங்களுக்காகவே

மேலும்

அழுவது போல

ஆரவாரம் செய்தது

அந்த அரும்பு

 

ஏழ்மை

 

பெட்டி நிறைய

பணம் தேவையில்லையென

நிரூபிக்கிறாள் அம்மா,

ஒவ்வொரு முறையும்

வட்டியில் சோறிடும்போது !

 

காரணம்

 

மழலையின்

எச்சில்பட்ட

ஒரு பருக்கைதான்

அன்று…..

அமுத சுரபி

உருவாகக் காரணமாக

இருந்திருக்கக் கூடும் !

 

அன்று, இன்று

 

அன்று,

கண்ணனின்

வாயில்,

உலகத்தைப் பார்த்த

யசோதை மயங்கினாள் !

இன்று,

தன் குழந்தையின்

வாயில்

ஒரு உருண்டை

சோறிட,

உலகிலுள்ள

அத்தனைக் கஷ்டங்களையும்

அனுபவித்து மயங்குகிறாள்

ஓர், ஏழைத்தாய் !

 

உணவு

 

எறும்பு,

என்ன சாப்பிடும் ?

என

எண்ணியக்

குழந்தைகள் தான்

பின்னாளில்

எறும்பு சாக்பீஸ்

என்ன விலை ?

என கேட்கும் பெரியவர்கள் !

 

பிரசவம்

 

கருவறையில்

கற்சிலைக்கு

பத்துமாதம் தான்

பட்டாவா ?

அம்மா….

வெளியில் நான்

வரவில்லை,

இன்னும் சிறிது

காலம்  தங்கியிருக்கிறேன்

கூப்பிடாதே ! என

கெஞ்சுகிறது ஒரு சிசு !