ஐதராபாத்: மண்டல் வருவாய் அலுவலகங்களில் உள்ள தாசில்தார்களுக்கு வேளாண்மை நில பதிவு அதிகாரங்களை மாற்றும் வகையில், தெலுங்கானாவிலுள்ள 142 துணை-பதிவாளர் அலுவலகங்களுக்கும், சொத்துக்கள் மற்றும் நிலங்களைப் பதிவுசெய்வதிலிருந்து செப்டம்பர் 8 முதல் விடுமுறை அறிவித்துள்ளது அம்மாநில அரசு.

செப்டம்பர் 8ம் தேதி முதல், அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இந்த விடுமுறை அறிவிப்பு தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம், பத்திரங்கள், திருமணப் பதிவுகள் மற்றும் வெளிப்படையான சேவைகள் தொடர்பானவற்றை, அந்த அலுவலகங்கள் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத் தாள் துறை வெளியிட்டுள்ள அரசு ஆணையின்படி, “சொத்து ஆவணங்களைப் பதிவு செய்வதில் தரமான சேவையை வழங்குதல், செயல்முறை மற்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டில் மாற்றங்களைக் கொணர்தல் ஆகியவற்றுக்காக, சொத்து மற்றும் நிலப் பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.

வருவாய் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் வகையில், வேளாண் நிலங்கள் பதிவுசெய்வதை, தாசில்தார்களின் அதிகார வரம்புக்குள் கொண்டுவரும் வகையில்(விரைவில் மாற்றம் நடைபெறுவதற்கு), இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.