டெல்லி: தேர்தல் பணியின்போது கொரோனாவால் உயிரிழக்கும் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.30லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேலும், பல மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற, பாராளுமன்ற இடைத்தேர்தல்களையும் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், தேர்தல் பணியின்போது, எதிர்பாராத விதமான கொரோனாவால் உயிரிழக்கும் பணியாளர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.
இதுதொடர்பாக  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  பொது அல்லது இடைத்தேர்தல் பணியின்போது காயமடையும் தேர்தல் பணியாளர்களுக்கும், இறக்கும் தேர்தல் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் வழங்கப்பட வேண்டிய இழப்பீடு குறித்து 2019-ம் ஆண்டு மே மாதம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில், தேர்தல் பணியில் இருக்கும் ஊழியர் (சி.ஏ.பி.எப். என்ற மத்திய ஆயுதப்படை வீரர் மற்றும் தேர்தல் பணியாளர்கள்) கொரோனா நோயினால் மரணமடைய நேரிட்டால் அவருடைய குடும்பத்தினருக்கும் ரூ.30 லட்சம் இழப்பீட்டை வழங்குவது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வரப்பெற்றன.

எனவே தேர்தல் பணியில் ஈடுபடும் போது கொரோனா நோயினால் உயிரிழக்கும் சி.ஏ.பி.எப். வீரர்கள், பி.இ.எல். அல்லது இ.சி.ஐ.எல். பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் ரூ.30 லட்சம் இழப்பீடாக வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் போது எதிர்பாராத விதமாக சமூக விரோதிகள், பயங்கரவாதிகளால் ஏற்படும் வெடிகுண்டு சம்பவங்கள், ஆயுத தாக்குதல் போன்ற வன்முறையில் உயிரிழக்கும் தேர்தல் பணியாளர்களுக்கு இந்த தொகை இழப்பீடாக வழங்கப்படுகிறது. தற்போது கொரோனாவினால் ஏற்படும் இறப்பையும் இந்த பட்டியலில் சேர்த்து அதற்கேற்ற வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் முந்தைய உத்தரவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.