திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் வழிப்பாட்டுத் தலங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து, பிரபலமான திருப்பதி ஏழுமலை யான் கோவிலிலும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான பூஜைகள் நடந்து வந்தன.
பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும், கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கோவில் திறக்கப்பட்டு, பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்ளுர் மக்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக, கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் என பலருக்கும் தொற்று பரவியதால், மீண்டும், பக்தர்களுக்கான தரிசனம் தடை செய்யப்பட்டது.
இதையடுத்து, நாள் ஒன்றுக்கு 3ஆயிரம் பேர் மட்டுமே தரிசனம் செய்யும் வகையில், கடந்த ஆகஸ்டு மாதம் 29ந்தேதி மீண்டும் டோக்கன் விநியோகம் நடைபெற்றது. ஆனால், மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.