சென்னை: தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து, வரும் 7 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
ஆனால், தெற்கு ரயில்வே அப்படியொரு எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை, என்று மறுப்பு தெரிவித்து உள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதையடுத்து, வரும் 7 ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. இதனால் பேருந்து போக்குவரத்து மற்றும், 13 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளது. மேலும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், அண்டை மாவட்டத்தின்ர், புறநகர் ரயில் சேவை எப்போது தொடங்கும் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், திடீரென, புறநகர் ரயில் சேவையும் 7ந்தேதி முதல் தொடங்குவதாக அட்டவணை வெளியானது.
இந்த நிலையில், இந்த தகவலை மறுத்துள்ள தென்னக ரயில்வே, சென்னையில் தற்போது வரை புறநகர் ரயில் சேவை இயக்குவது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.