வாஷிங்டன்: அமெரிக்காவின் பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் ஃபிஸர் இங்க் இணைந்து, அக்டோபர் இறுதியில், கொரோனா தடுப்பு மருந்து பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படலாம் என்று அறிவித்துள்ளன.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கொரோனா பரவல் மற்றும் அதன் தாக்கங்கள், அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், இந்த அறிவிப்பின் பின்னணியில் எந்த அரசியல் நிர்ப்பந்தமும் கிடையாது என்று வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கேய்லே மெக்னானி கூறியுள்ளார்.
“அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கழகத்திற்கு, எந்த முடிவையும் மேற்கொள்ளும் வகையில், யாரும் நெருக்கடி தரவில்லை” என்றுள்ளார் அவர்.
அமெரிக்காவில், இதுவரை 185000 பேரின் மரணத்திற்கு காரணமாக கொரோனா நோய்க்கு, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வகையில் இதுவரை டிரம்ப் நிர்வாகம் பில்லியன் கணக்கான டாலர்களை ஒதுக்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.