புதுடெல்லி: புகழ்பெற்ற பப்ஜி மொபைல் விளையாட்டிற்கு இந்தியாவில் தடைவிதிப்பட்டுள்ள நிலையில், FAU-G என்ற மல்டிபிளேயர் விளையாட்டு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பாலிவுட் நட்சத்திரம் அக்சய் குமார்.
இந்த விளையாட்டு பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்ம நிர்பார் இயக்கத்திற்கு ஆதரவாய் அமையும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விளையாட்டில் பங்கேற்பவர்கள், எல்லையில் நமது ராணுவ வீரர்கள் படுகின்ற துயரங்களையும், அவர்களின் தியாகங்களையும் அறிந்துகொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
“பிரதமர் மோடியின் ஆத்ம நிர்பார் இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், இந்த விளையாட்டு குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் பெருமையடைகிறேன். ஃபியர்லெஸ் அண்ட் யுனைடெட் – கார்ட்ஸ்(FAU-G) என்பதுதான் அந்த விளையாட்டு.
இந்த விளையாட்டில், பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, நமது ராணுவத்தினரின் தியாகங்களையும் விளையாடுவோர் கற்றுக்கொள்வார்கள். இந்த விளையாட்டின் மூலம் திரட்டப்படும் மொத்த நிதியில் 20%, #பாரத்கீவீர் டிரஸ்ட் -க்கு வழங்கப்படும்” என்றார் அக்சய் குமார்.
இந்த விளையாட்டு குறித்த அதிக விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. பப்ஜி விளையாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையால் பல அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், இந்த விளையாட்டின் மொபைல் & டெஸ்க்டாப் வெர்ஷன்கள் இன்னும் இந்தியாவில் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.