வாஷிங்டன்: தன் தலைமுடி மழையால் அலங்கோலமாகிவிடும் என்ற காரணத்தாலேயே, கடந்த 2018ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிலுள்ள எய்னே-மார்ன் அமெரிக்கர்கள் கல்லறைக்கு செல்வதை தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் தவிர்த்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தக் கல்லறைக்கு சென்று, முதலாம் உலகப்போரில், கூட்டணிப் படைகளின் சார்பில் ஜெர்மனி ராணுவத்திடம் சண்டையிட்டு மடிந்த அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் மழைபெய்த காரணத்தால், அந்த இடத்திற்கு ஹெலிகாப்டரில் பறந்துசெல்ல முடியாது என்பதால், அமெரிக்க பாதுகாப்புப் படையினர் தன்னை அங்கே அழைத்துச் செல்லவில்லை என்று தெரிவித்திருந்தார் டிரம்ப்.

ஆனால், அவர் சொன்ன காரணம் பொய் என்று இன்னொரு தரப்பு தெரிவிக்கிறது. அந்த இடத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்த அந்த காலை நேரத்தில், “நான் எதற்காக அந்த இடத்திற்கு சென்று மரியாதை செலுத்த வேண்டும். அந்த இடம் தோற்றவர்களால் நிரப்பப்பட்டுள்ளது” என்று தனியான ஒரு உரையாடலில் டிரம்ப் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், மழை பெய்த காரணத்தால், மழையில் தன் தலைமுடி அலங்கோலமாகிவிடும் என்ற பயத்தாலும், நாட்டிற்காக உயிர் துறந்த ராணுவத்தினருக்கு மரியாதை செய்ய வேண்டிய கட்டாயமில்லை என்ற எண்ணத்தாலுமே, அப்பகுதிக்கு செல்லவில்லை என்று மற்றொரு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.