இஸ்லாமாபாத்: ஓஐசி எனப்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு காஷ்மீர் விவகாரத்தில் சரியாக செயல்படாதபோதும், செளதி அரேபியா எப்போதுமே பாகிஸ்தானின் நண்பன்தான் என்றுள்ளார் இம்ரான்கான்.

செளதி அரேபியா, பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ள கடன்தொகை தொடர்பாக நெருக்கடி ஏற்பட்டதால், இப்படியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது பாகிஸ்தான்.

காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தை அவசரமாகக் கூட்டுமாறு செளதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை விடுத்தார். ஆனால், இந்தக் கோரிக்கையை நிராகரித்தது செளதி அரேபியா.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளதாவது, “காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று விரும்புகிறோம். இருப்பினும், ஒன்றை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். சவுதி அரேபியா எப்போதும் எங்களின் நண்பன்தான்” என்றுள்ளார் அவர்.

இஸ்லாமிய நாடுகளின் கூட்டத்தைக் கூட்டி காஷ்மீர் பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கைக்கு 57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு செவி சாய்க்கவில்லை. இதனால், பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் ஆதரவு கிடைப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.