சென்னை: தமிழகத்தில் விவசாயிகளுக்கான கிசான் திட்டத்தில் ஏராளமான முறைகேடு நடை பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் போலி பயனர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதும், மோசடி செய்த நபர்களிடம் இருந்து இதுவரை ரூ.5.60 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு வழங்கப்படும், பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில், தமிழகத்தில், விவசாயி கள் அல்லாத போலி பயனர்கள் சேர்க்கப்பட்டு முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு குறித்து வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி , 13 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி, முறைகேடாக சேர்ந்தவர்களை அதிரடியாக நீக்கியும், அவர்கள் முறைகேடாக பெற்ற பணத்தை திரும்பி வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டது.
அதன்படி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விவசாயி அல்லாதோர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்தது. முறைகேடாக சேர்ந்த பயனர்களின் கணக்குகள் முடக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக, அம்மாவட்ட உயரதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இத்திட்டத்தில் மோசடி செய்த 4 ஒப்பந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் மோசடியதாக சேர்க்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ரூ.5.60 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.