சென்னை: தேசியக் கொடி அவமதிப்பு தொடர்பான முன்ஜாமின் வழக்கில்,  ‘எதிர்காலத்தில் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன்’ என உயர்நீதிமன்றத்தில் மன்னிப்புக்கோரி பிரமான பத்திரம் தாக்கல் செய்தார் எஸ்.வி.சேகர்.

தேசிய கொடியில் உள்ள மூன்று வண்ணங்களையும் மதங்களையும் தொடர்புபடுத்தி எஸ்.வி.சேக்ர கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் முதல்வரின் கருத்தையும் அவமதித்து பேசியிருந்தார்.

இதுதொடர்பாக  சென்னை, நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர், ராஜரத்தினம். இவர், ‘ஆன்லைன்’ வாயிலாக, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், ”யு டியூப்’பில், நடிகர் எஸ்.வி.சேகர், ‘வீடியோ’ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். மேலும், முதல்வர் இ.பி.எஸ்., குறித்தும், அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், கருத்து தெரிவித்துள்ளார். எஸ்.வி.சேகர் மீது, தேசியக்கொடி அவமதிப்பு சட்டத்தின் படி, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரில் தெரிவித்தார்.

இந்த புகார் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய கொடியை அவமதித்ததாக, நடிகர் எஸ்.வி.சேகர் மீது, வழக்குப் பதிவு செய்தனர்.

இதனால், கைது செய்யப்படலாம் என அதிர்ச்சி அடைந்த எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும், காவல்துறையினரின் விசாரணைக்கும் 2 முறை ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், முன்ஜாமின்  வழக்கு விசாரணையில், தேசியக் கொடியை அவமதித்ததற்காக மன்னிப்பு கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தால் நடிகர் எஸ்.வி.சேகர் கைது செய்யப்பட மாட்டார் என சென்னை போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதையடுத்து செப்டம்பர் 7 வரை எஸ்.வி. சேகரை கைது செய்ய தடை விதித்த நீதிமன்றம், முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது.

இந்த நிலையில், தேசிய கொடி அவமதிப்பு வழக்கில், வருத்தம் தெரிவித்து எஸ்.வி.சேகர். சென்னை உயர்நீதி மன்றத்தல் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் எதிர்காலத்தில் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து எஸ்.வி.சேகரை கைது செய்யக் கூடாது என போலீசாருக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 7ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.