டெல்லி: 15வது நிதி குழு பொருளாதார ஆலோசனை கவுன்சில் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
நாட்டில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து முடக்கத்தில் தான் உள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளிலும் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, 15வது நிதி குழு பொருளாதார ஆலோசனை கவுன்சில் கூட்டம் நாளை நடைபெறுகிறது. அதற்கான அறிவிப்பை மத்திய நிதி குழு வெளியிட்டுள்ளது.அது தொடர்பான செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
15வது நிதி குழுவின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினர்களுடனான கூட்டம் நாளை நடைபெறுகிறது. கூட்டத்தில், உள்நாட்டு பொருளாதார உற்பத்தி, மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி வருவாய் வளர்ச்சி, ஜி.எஸ்.டி. இழப்பீடு, வருவாய் பற்றாக்குறைக்கான மானியம் மற்றும் நிதி கொள்கைகள் பற்றி ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.