டெல்லி: மத்திய அரசு பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட் டுள்ள ‘மிஷன் கர்மயோகி’ என திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிக் உள்ளதாக அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர்,
ஜம்மு – -காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தற்போது, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகள் மட்டுமே அலுவல் மொழியாக இருந்து வருகின்றன. தற்போது, ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழி மசோதா-2020க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதனால், ஜம்மு –காஷ்மீரின் அலுவல் மொழியாக, உருது, டோக்ரி, காஷ்மீரி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய, ஐந்து மொழிகளுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை, மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
ஜவுளி துறை, சுரங்கத் துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை ஆகியவற்றின் திட்டங்களுக்கு, ஜப்பான், பின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவும், அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில், ‘மிஷன் கர்மயோகி’ என்ற திட்டத்தை அமல்படுத்த, அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இத்திட்டம், மனிதவள மேம்பாட்டில், முக்கிய சீர்த்திருத்தமாக இருக்கும் என்று கூறிய அமைச்சர், இந்த திட்டத்தை செயல்படுத்த, பிரதமர் மோடி தலைமையில், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட இருப்பதாகவும் கூறினார்.