மும்பை: ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காகவே, பிசிசிஐ அமைப்பு ரூ.10 கோடியை செலவிடவுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமீரக நாட்டில், செப்டம்பர் 19ம் தேதி ஐபிஎல் 13வது சீசன் தொடங்குகிறது. இந்நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணி வீரர்கள், ஊழியர்களுக்குக் கொரோனா பரிசோதனை நடத்துவதற்காக தனியாக ஒரு மருத்துவக் குழுவை பிசிசிஐ நியமித்துள்ளது. கடந்த 20ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் அணிகள் சென்றதிலிருந்து சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.
ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளில் உள்ள வீரர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அந்த 6 நாட்களில் முதல் நாள், மூன்றாம் நாள், ஆறாம் நாள் கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக இரு பரிசோதனைகளைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “அமீரக நாட்டில் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த இந்நாட்டைச் சேர்ந்த விபிஎஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்துள்ளோம்.
இந்த நிறுவனத்திலிருந்து 75 ஊழியர்கள் சுழற்சி முறையில் பிசிஆர் டெஸ்ட்டை வீரர்களுக்கு எடுத்து வருகின்றனர். ஏறக்குறைய ஐபிஎல் தொடர் வரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகளை நடத்த முடிவு செய்துள்ளோம்.
ஒரு பரிசோதனைக்கு பிசிசிஐ சார்பில் 200 திர்ஹாம் கட்டணம் செலுத்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ரூ.10 கோடியை கொரோனா பரிசோதனைக்காக மட்டும் செலவிடுகிறோம்” என்றார் அவர்.