மடியாசனம் – மழலையர்க் கவிதைகள்

தொகுப்பு 3

பா. தேவிமயில் குமார்

 

பெருமழை

 

மழையில் நனையாதே ! என

மழலைக்கு இட்டக்

கட்டளையைக் கேட்டு

இன்னும்….

இன்னும்….

அதிகமாக

அழுதது மழை !

 

குறை

 

குறைகளைக் கூட

கொண்டாடும்

குணமுடையவர்கள்

குழந்தைகள் !

ஆம்…..

அதோ !

நொண்டி விளையாட்டைக்கூட

நன்றாக, ரசித்து

விளையாடுகின்றனரே !

 

நிஜம்

 

கார்ட்டூன்

கதாபாத்திரங்களைப்

போலவே,

பிஞ்சுகள்

பாடுவதும், ஆடுவதும்

பேசுவதும், சிரிப்பதும் என

பிரதிபலிப்பதைப்

பார்க்கும் போது,

பிஞ்சுகள் இனி

வரும் காலங்களில்

தங்கள் சுயத்தை

தொலைத்து விடுவார்களோ ? என

தோன்றுகிறது !

 

சிறகு

 

குழந்தைகளின்

கனவுகளை

கொஞ்சம் கொஞ்சமாக

நஞ்சு கொடுத்து

கலைப்பது போலுள்ளது

“முதலிடம்” நீ வர

வேண்டுமென சொல்வது !

 

ஏக்கம்

 

ஒவ்வொரு நாளும்

ஏமாறுகிறது

தலையணையைத்

தன் தாயின் நெஞ்சணையென

தாயற்ற ஒரு பிஞ்சு !

 

மடியாசனம்

 

இது, மயிலாசனம்

மன்னர்கள் அமர்ந்தது

இப்போது என்,

மகள் அமரட்டும் என

முகமெல்லாம் சிரிப்பாக,

அந்த சிறு நாற்காலியில் தன் மகளை

அமர வைத்தான், அப்பன் !

ஆனால்…..

போப்பா, இது வேணாம்

போய் திரும்பக் கொடுத்திடு !

உன் மடியாசனம் மட்டும்

எனக்குப் போதும்,

என மடியில அமர்ந்தது

பெண் குழந்தை !

இப்போது அவளின்

அப்பன் உண்மையாகவே

அரசனாக உணர்ந்தான் !

 

தூறல்

 

விளையாடிக்

களைப்பிலிருந்த,

சிறுவர்களுக்கு ஆனந்தம் !!

தென்றலுடன் மழை

தூறியது ! அவர்களுக்கு,

விசிறி விடவே மழை ஓடி

வந்ததென அறிய மாட்டார்கள்

அவர்கள் ! சிறுவர்கள் தானே !

 

மழைக்காலம்

 

காகிதக் கப்பல்

கட்டத் தெரிந்த

குழந்தைக்கு,

அது எந்த

எரிபொருளில் ஓடும் என

தெரியவில்லை !

ஒருவாறாக, தன்

ஆரவாரத்தையும், ஆசையையும்

நிரப்பி ஓட விட்டது !

 

குப்பை

 

குப்பைத் தொட்டி என்ற

செய்தியைப் பார்க்கும் போதே,

“குழந்தை” என அடுத்த

வார்த்தை இருக்குமோ என

வாடுகிறது எண்ணங்கள் !

 

சுத்தம்

 

குப்பை பொறுக்கும்

குழந்தைகளைப்

பார்த்துக் கொண்டே

போகிறோம்,

ஆனால்……

நான் ரொம்ப

சுத்தம் என்று

சத்தம் போட்டு

சொல்லிக் கொள்கிறோம் !

சொல்லுவோம் !

சொல்லிக்கொண்டே இருப்போம்

அவர்களும் குப்பைகளை

அள்ளிக்கொண்டே இருப்பார்கள் !