புதுடெல்லி:

சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்திற்கு பிறகு பாலிவுட் பிரபலங்கள் போதை பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில், மோடி பட தயாரிப்பாளர் சந்தீப் சிங் சிக்கியுள்ள நிலையில், அவரை பா.ஜ.க., காப்பாற்றுவதாக காங்., புகார் கிளப்பியுள்ளது.

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரண வழக்கை விசாரித்த போது பாலிவுட் பிரபலங்கள் பலர் போதை பொருள் கும்பலுடன் தொடர்பிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுஷாந்தின் காதலி ரியா, அவரது சகோதரர் ஆகியோர் மீது போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2019 தேர்தலுக்கு முன் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரித்த தயாரிப்பாளரும், சுஷாந்தின் நெருங்கிய நண்பருமான சந்தீப் சிங் மீதும் இக்குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் சந்தீப் சிங்கை காப்பாற்ற பா.ஜ.க., முயல்வதாக காங்., செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி புகார் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாலிவுட் விஷயங்களில் அரசியல் கட்சிகள் தலையிடுவதில்லை. ஆனால் சந்தேககிக்கப்படும் நபர் ஆளும் கட்சியுடன் தொடர்பானவர் என்பதால், அவரை பா.ஜ.க.,வில் காப்பாற்ற நினைப்பது யார் என்பதை நாடு அறிய விரும்புகிறது.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட ஆர்வம் காட்டியதற்கு சந்தீப் சிங் தான் காரணமா?

கடந்த சில மாதங்களில் மகாராஷ்டிரா பா.ஜ.க., அலுவலகத்திற்கு சந்தீப் சிங் 53 அழைப்புகளை மேற்கொண்டுள்ளார். பா.ஜ.க., அலுவலகத்திற்கு ஏன் இந்த அழைப்புகளை அவர் செய்தார், அவருடைய முதலாளி யார் என்பதற்கு பட்னவிஸ் மற்றும் பாஜக மூத்த தலைவர் நிதின் கட்காரி பதிலளிக்க வேண்டும்.

மொரீசியஸ் நாட்டில் மார்ச் 29-ல் சுவிஸ் சிறுவனை தாக்கியதாக அவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது. அவரது நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிய போதும், வைபரன்ட் குஜராத் மாநில மாநாட்டிற்காக 2019-ல் ரூ.177 கோடி ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. இவ்வாறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.