புதுடெல்லி :

ம்மு-காஷ்மீரில் குடியேறியவர்களின் நில உரிமைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான அரசாணை வெளியிட மத்திய அரசு தயாராகிறது.

விவசாய நிலங்களைப் பாதுகாக்க வேண்டியது குறித்த விவாதம் முடிவடைந்ததும் இந்த அரசாணை நிறைவேற்றப்படும் என்று தகவலறிந்த அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

2018 ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அதே ஆண்டு நவம்பர் மாதம் சட்டமன்றம் கலைக்கப்பட்டது.

பின்னர், 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன் அதனை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டாகப் பிரித்து மாநில அந்தஸ்த்தில் இருந்து யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.

இந்த யூனியன் பிரதேசங்களில் இருப்பவர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்காக இங்கு வசிப்பவர்களை வகைப்படுத்தி ஜம்மு-காஷ்மீர் சிவில் சர்வீசஸ் பரவலாக்கம் மற்றும் ஆட்சேர்ப்புச் சட்டம் 2010-ல் உள்துறை அமைச்சகம் இந்த ஆண்டு தொடக்கத்தில் திருத்தம் செய்தது.

ஜம்மு-காஷ்மீர் சிவில் சர்வீசஸ் பரவலாக்கம் மற்றும் ஆட்சேர்ப்புச் சட்டம், 2010-ல் இருந்த “நிரந்தரமாக வசிப்பவர்கள்” என்ற வார்த்தையை “குடியிருப்பவர்கள்” என்று மாற்றியது. ஜம்மு-காஷ்மீரில் 15 வருடங்கள் தங்கியிருந்த அல்லது ஏழு ஆண்டுகள் வசித்து அங்குள்ள கல்வி நிறுவனத்தில் 10 அல்லது 12-ம் வகுப்பு தேர்வெழுதியவர்கள் அல்லது புலம்பெயர்ந்தவராக பதிவுசெய்தவர்கள் அனைவரும் “குடியிருப்பவர்கள்” என்று வரையறுக்கப்பட்டது.

இந்த சட்டத்திருத்த வரைவில் குரூப் டி மற்றும் முதல் நிலைப் பணியாளர்களுக்கு மட்டுமே “குடியிருப்பவர்களுக்கு” பணிப்பாதுகாப்பு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது, இதற்கு பாஜகவின் ஜம்மு பிரிவு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதில் மாற்றம்செய்யப்பட்டது.

“குடியிருப்பவர்கள் குறித்த சட்ட திருத்தத்தில் அரசு எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்ததால், அதைத் தவிர்க்க நில உரிமைச் சட்ட விஷயத்தில் அரசு எச்சரிக்கையாக செயல்படுவதாக” அந்த அதிகாரி கூறினார்.

“உள்துறை அமைச்சர் இந்த பிரச்சினையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார், அது வெளியிடப்படுவதற்கு முன்னர் அது சட்டப்பூர்வமாக ஆராயப்பட்டு கவனமாக ஆய்வு செய்யப்படும், ” என்று அவர் மேலும் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆண்டு “தொழில்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களை நிறுவ அரசு நிலம் மட்டுமே பயன்படுத்தப்படும்” என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, விவசாய நிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து தற்போது விவாதித்து வருவதாக அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தி இந்து நாளிதழுக்குத் தெரிவித்ததாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு இரண்டிலும் இது ஒரு உணர்ச்சிபூர்வமான பிரச்சினை என்பதால் அனைத்து சிக்கலான அம்சங்களும் ஆராயப்பட்டுவருகின்றது.

அதே வேளையில் புதிய தொழில் மற்றும் வணிகம் உள்ளிட்ட வளர்ச்சி அம்சத்தைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது, அதனால், ஜம்மு-காஷ்மீர் நில பாதுகாப்புக் கொள்கை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தாமல் அரசாணையாக நிறைவேற்றப்பட இருக்கிறது” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்திற்கு உண்டான சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்படுவதற்கு முன் 1935-ல் அங்கு நிலம் கையகப்படுத்தும் சட்டம் இயற்றப்பட்டது. தற்போது இந்த அரசாணை வெளியானதும், இங்கு முதலீடு செய்வதற்காக 600 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு தயாராக உள்ளது.

நிலம், கல்வி, வேலைவாய்ப்பில் மாநில மக்களின் உரிமைகளை காக்கும் அரசியலமைப்பின் 371 வது பிரிவு இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் 12 மாநிலங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.