டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
செப்டம்பர் முதல் வாரம் நீட், ஜேஇஇ தேர்வுகள் நடக்கின்றன. ஹால் டிக்கெட், வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் கொரோனா பரவல் நேரத்தில் தேர்வு நடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், தேர்வை எப்படியாவது நடத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனையும் நடத்தப்பட்டது. அந்த ஆலோசனையின் முடிவில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் சார்பில், நீட், ஜேஇஇ தேர்வுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.