திருவாரூர்: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும்போதுதான்,  கூட்டணி குறித்தும், கூட்ட ணிக்கு யார் தலைமை என்பது குறித்தும் முடிவெடுக்க முடியும்” என தமிழக பாஜகவினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை, மாவட்ட வளர்ச்சி பணிகள், அரசு திட்டங்கள் தொடங்கி வைப்பு மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இன்று திருவாரூர் சென்றுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தேர்தல் கூட்டணி, கட்சித் தலைமை, நீட் தேர்வு போன்ற பல்வேறு விசயங்கள் குறித்து செய்தியாளர்களை கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த முதல்வர், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும்போதுதான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்,  கூட்டணியில் யார் என்பதே இன்னும் முடிவாகவில்லை, தேர்தல் தேர்தல் வரும் போது தான் கூட்டணிக்கு யார் தலைமை என்பது முடிவு செய்யப்படும். யார் யாருடன் கூட்டணி என்பது முடிவாகாத நிலையில் இதுகுறித்து தற்போது பேச முடியாது.

தற்போதைய கொரோனா சூழலில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்தியஅரசுக்கு கடந்த ஜூலை மாதமே கடிதம் எழுதி உள்ளதாகவும்,   கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழகஅரசின் முடிவு என்றும் கூறினார்.

சமீப காலமாக, தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம், பாஜக தலைமையில்தான் கூட்டணி, திமுகவுக்கும் பாஜகவும் இடையேதான் சட்டமன்ற தேர்தலில் போட்டி என கூறி வரும் தமிழக பாஜகவினருக்கு பதிலடி தரும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் வரட்டும் பார்க்கலாம், அப்போது தலைமை குறித்து முடிவு செய்யலாம் என்று கூறி உள்ளார்.