திருவனந்தபுரம்: கேரளா தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் தங்கக்கடத்தல் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று தலைமை செயலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல முக்கிய ஆவணங்கள் தீயில் நாசமாகியதாக கூறப்படுகிறது.
ஆளும் கட்சியினர் வேண்டுமென்றே தீ வைத்து, விபத்து போன்று நாடகம் நடத்துவதாகவும், தங்க கடத்தல் வழக்கின் ஆவணங்களை அழிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆளும் கட்சி மீது காங்கிரஸ் மற்றும் பாஜக குற்றம்சாட்டி உள்ளது.
இந்த கோரிக்கையை முன் வைத்து அவர்கள் தலைமை செயலகம் முன் தர்ணா செய்ய மேலும் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். விபத்தையடுத்து தலைமை செயலாளர் பிஸ்வாஸ் மேத்தா உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந் நிலையில் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறி இருப்பதாவது: தீவிபத்து நடந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆராய வேண்டும். அதிமுக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
அதேபோல கேரளா பாஜக தலைவர் சுரேந்திரன் கூறி இருப்பதாவது: தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணையின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தீ விபத்து அல்ல, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.